செய்திகள்

உடுமலை அருகே தனியார் கம்பெனி பஸ் மோதி 3 தொழிலாளர்கள் பலி

Published On 2018-10-30 07:07 GMT   |   Update On 2018-10-30 07:07 GMT
உடுமலை அருகே தனியார் கம்பெனி பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 தொழிலாளர்கள் பலியானார்கள். #accident

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிகோட்டை, அமராவதி சக்தி நகர், ராமேகவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவிக்குமார் (30), எஸ். குமரேசன் (32), பெரியசாமி (32), ஏ. குமரேசன்(29), சின்னமாரன் (50) ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் உடுமலைக்கு வேலைக்கு வந்தனர்.3 மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர்.

இன்று காலை 8.30 மணியளவில் அவர்கள் போடிப்பட்டி அண்ணா நகரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனியார் கம்பெனி பஸ் வந்தது.

இந்த பஸ்சில் அமராவதி, குறிச்சிகோட்டை, பல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.

திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

இதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். எஸ். குமரேசன் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

சின்னமாரன் பலத்த காயம் அடைந்தார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.ஏ. குமரேசன், பெரியசாமி ஆகியோர் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து தனியார் கம்பெனி பஸ் டிரைவர் அமராவதி சக்தி நகரை சேர்ந்த சின்னசாமியை கைது செய்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான 3 பேரின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #accident

Tags:    

Similar News