திருவாவடுதுறை ஆதீனத்துக்கு செல்போனில் கொலை மிரட்டல் - பா.ஜனதா பிரமுகர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சிங்கநீர் குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் முயற்சியால் கடந்த மாதம் குளம் மற்றும் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களான வண்ணக்குடி, ஆலங்கால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன.
இந்தநிலையில் குளம் தூர்வாரியபோது மணல் திருட்டு நடந்ததாக கூறி திருவிடைமருதூர் நகர பா.ஜனதா கட்சி தலைவர் ராஜூ (வயது 45) பிரச்சினை செய்து வந்தார்.
இதுசம்பந்தமாக திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமி குறித்து தரக்குறைவாக விமர்சித்து ராஜூ தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். மேலும் ஆதீனத்துக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் ஆதீனம் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா நகர தலைவர் ராஜூவை கைது செய்தனர். #BJP #Adheenam