செய்திகள்

சிதம்பரம் அருகே பள்ளி முன்பு இறந்து கிடந்த முதலையால் பரபரப்பு

Published On 2018-10-24 15:08 GMT   |   Update On 2018-10-24 15:08 GMT
சிதம்பரம் அருகே இன்று காலை பள்ளி முன்பு இறந்து கிடந்த முதலையால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளத்தில் கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் கரையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று சுற்றி திரிந்தது. அந்த முதுலை பொதுமக்களை பயமுறுத்தியது. பின்னர் மீண்டும் தண்ணீருக்குள் சென்று விட்டது. இதேப்போல் வல்லம்படுகை, வக்காரமாரி, பெராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளிலும் உள்ள முதலைகள் அடிக்கடி கரையோரம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் அடுத்த மடப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு ஒரு முதலை இறந்து கிடந்தது. பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டனர்.

இது குறித்து சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதலையை பார்வையிட்டனர்.

பள்ளிக்கு அருகே இருக்கும் வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியே வந்த முதலை இரை தேடி ரோட்டில் வந்த போது விபத்தில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முன்பு முதலை இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News