செய்திகள்

வியாசர்பாடி-கொடுங்கையூர் பகுதியில் தொழில்வரி செலுத்தாத 25 கடைகளுக்கு சீல்

Published On 2018-10-23 10:21 GMT   |   Update On 2018-10-23 10:23 GMT
வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் தொழில்வரி செலுத்தாத 25 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரம்பூர்:

சென்னை மாநகராட்சிக்கு முறைப்படி வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், கண்ணதாசன்நகர் பகுதியில் உள்ள சில கடைகள், நிறுவனங்கள் முறைப்படி லைசென்சு எடுக்காமலும், தொழில் வரி, சொத்து வரி செலுத்தாமலும் நடத்தப்படுவது தெரிய வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஏற்கனவே நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி 4-வது மண்டலத்தை சேர்ந்த அதிகாரிகள் அனிதா, சுரேஷ், பாஸ்கர், திருநாவுக்கரசு உள்பட 10 பேர் முறைப்படி வரி செலுத்தாத கடைகளில் இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த கடைகளை மூடி சீல் வைப்பதற்கான நோட்டீசையும் வழங்கினார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள், “மாநகராட்சிக்கு வந்து முறைப்படி வரி செலுத்தினால் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும்” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த பகுதியில் மொத்தம் 25 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News