செய்திகள்
ஆம்னி பஸ் நிலையம் முன்பு கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர்.

தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு- நாகர்கோவிலில் பயணிகள் போராட்டம்

Published On 2018-10-22 07:43 GMT   |   Update On 2018-10-22 07:43 GMT
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்களில் அதிகளவு கட்டணத்தை வசூலித்ததை கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி உள்ள நாட்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு சிறப்பு பஸ்களிலும் வேகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பண்டிகை கால பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் தங்களது கட்டணத்தை 2 மடங்கு உயர்த்திவிட்டன. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.1650 முதல் 2250 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

படுக்கை வசதி இல்லா பஸ்களில் ரூ.1300 முதல் ரூ.1490 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரங்களை தனியார் ஆம்னி பஸ்கள் ‘ஆன்-லைனில்’ வெளிப்படையாகவே வெளியிட்டு உள்ளது.

இதேபோல் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு பஸ்களை விட குறிப்பிட்ட நேரத்துக்குள் சொகுசான பயணம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை பொதுமக்கள் நாடிச்செல்லும் நிலை உள்ளது.

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். எனினும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டண கொள்ளையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆயுதபூஜை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.

விடுமுறை முடிந்து இவர்கள் நேற்று ஊர் திரும்பினார்கள். இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இருக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படும். படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1500 கட்டணம் ஆகும். சில ஆம்னி பஸ்களில் நேற்று இந்த கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.3000-ம் வரை வசூல் செய்யப்பட்டது.

இந்த கட்டண கொள்ளையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டண கொள்ளையை கண்டித்து குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் இடையில் உள்ள ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாமல் பல பஸ்கள் சென்றதால் பஸ் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
Tags:    

Similar News