செய்திகள்

ஓசூர் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

Published On 2018-10-20 12:31 GMT   |   Update On 2018-10-20 12:31 GMT
ஓசூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பனஹள்ளி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆஸ்டீன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது உறவினர் வசந்தகுமார். இவர்கள் 2 பேரும் தங்களது, உறவினர்களான மேரிவைலட்(65), டாரஸ் (48), ஏஞ்சல் (18), அனிதா (18) உள்பட 9 பேருடன் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்தனர்.

அவர்கள் அங்கு பிரார்த்தனை முடித்து விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது காரை வசந்தகுமார் ஓட்டி சென்றார். காரை நாகமங்கலத்தில் இருந்து கெலமங்கலம் வழியாக செல்லாமல் சூளகிரி வழியாக தவறுதலாக சென்று விட்டனர்.

சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒரு யு வடிவ வளைவில் ஒசூரில் இருந்து ஒரு லாரி திரும்பியது.

இதனை சற்று எதிர்பாராத வசந்தகுமார் காரை வேகமாக சென்று லாரி நடுவில் மோதி விட்டார்.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த மேரி வைலட், அனிதா, ஏஞ்சல் ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் டாரஸ், ராஜன், காரை ஓட்டி வந்த வசந்தகுமார், அவரது 6 மாத ஆண் குழந்தை உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சூளகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் டாரஸ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News