செய்திகள்
முட்புதரில் வீசப்பட்ட குழந்தை

காரம்பாக்கத்தில் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது

Published On 2018-10-19 06:19 GMT   |   Update On 2018-10-19 06:19 GMT
போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் குழந்தையை முட்புதரில் வீசிய தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போரூர்:

போரூரை அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மின்சார சுடுகாடு அருகே உள்ள முள்புதரில் கடந்த 11-ந் தேதி பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது.

வளசரவாக்கம் போலீசார் குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆற்காடு சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் கையில் பையுடன் வந்து குழந்தையை புதரில் போட்டு சென்றது தெரியவந்தது.

இதனை வைத்து விசாரணையை தொடங்கினார். இதில் குழந்தையை வீசி சென்றது காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (22) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் திருச்சி. கடந்த ஒரு வருடத்திற்கு முன் தாயுடன் காரம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினேன்.

நான் சென்ட்ரல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவருடன் நெருக்கமான தொடர்பு இருந்ததால் திருமணத்துக்கு முன்பே நான் கர்ப்பம் அடைந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது தாய் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென இறந்து விட்டார்.

இதனால் உறவினர் திருமணம் செய்ய மறுத்து என்னை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டில் உள்ள கழிவறையில் குழந்தையை பெற்றேன் குழந்தையை பராமரிக்க முடியாமல் தவித்தேன்.

குழந்தை தொடர்ந்து அழுது வந்ததால் வேறு வழி தெரியாமல் 10-ந்தேதி இரவு குழந்தையை லுங்கியால் சுற்றி பையில் வைத்து முள் புதரில் வீசி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றி சென்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News