செய்திகள்

கொளத்தூர் அருகே தொழிலாளி அடித்துக் கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-10-19 04:47 GMT   |   Update On 2018-10-19 04:47 GMT
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக தொழிலாளியை உறவினர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 50). இவர் மாதையன் குட்டையில் உள்ள கனிமவளத்துறை குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மயில்சாமிக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் கோபம் அடைந்த உறவினர்கள் மரக்கட்டையால் மயல்சாமியின் தலையில் ஓங்கி அடித்தனர். மேலும் இடுப்பு, கை, கால்களையும் அடித்து உதைத்தனர். இதில் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மயில்சாமிக்கு சொந்தமாக ஆடுகள், மாடுகள் மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உறவினர்கள் வளர்த்து வரும் கால்நடைகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி, நிலம் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே மயில்சாமி அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையில் 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவர்கள் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தப்பி ஓடி விட்டனர். கொளத்தூர் அருகே உள்ள பாலாற்றை தாண்டினால் கர்நாடக மாநில எல்லை வந்து விடும். மலைகள் சூழ்ந்துள்ள இந்த எல்லையில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. அதுபோல் காவிரி ஆற்றின் மறுகரைக்கு சென்றால் தர்மபுரி மாவட்டம் வந்து விடும். இந்த எல்லைப் பகுதிகளில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மயில்சாமி ஏற்கனவே இதய நோயால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டார்களே? என உறவினர்கள் கதறி அழுதனர். மயில்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டுள்ளனர்.
Tags:    

Similar News