செய்திகள்

திருச்சி பிரபல ரவுடி கொல்லப்பட்டது ஏன்? தாதாவாக வலம் வந்தவர் தனியாக சிக்கிய பரிதாபம்

Published On 2018-10-10 15:05 GMT   |   Update On 2018-10-10 15:05 GMT
அ.தி.மு.க. பிரமுகர் கொலை உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி:

திருச்சி முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சந்துரு (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது செங்கல்பட்டில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. பிரமுகர் குரங்கு குமார் மற்றும் திருச்சி காந்திமார்க்கெட்டில் நடந்த ஆள்மாறாட்ட கொலை வழக்குகள் உள்ளன.

மேலும் சந்துரு மீது திருவாரூரில் நடந்த திருட்டு வழக்கு, முதலியார்சத்திரம் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கிய வழக்கு மற்றும் ஏராளமான செயின் பறிப்பு, அடிதடி, வழிப்பறி வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு முதலியார் சத்திரம் அருகே கெம்ஸ்டவுன் ரெயில் தண்டவாளம் அருகில் சந்துரு தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்ததும் ரவுடி சந்துருவின் மனைவி, தாய் மற்றும் சகோதரர்கள் விரைந்து வந்தனர். சந்துருவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் நிஷா, கோட்டை சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் கோடிலிங்கம் மற்றும் பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்துருவை வெட்டி கொன்ற கும்பல் யார்? அவரை கொலை செய்தது ஏன்? என விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ரவுடியான சந்துரு அந்த பகுதியில் எப்போதும் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்வார்.

கெம்ஸ்டவுன் தண்டவாள பகுதியில் சந்துரு இரவில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம். அப்போது அங்கு கஞ்சா, மது போதையில் சுற்றித்திரியும் இளைஞர்களுடன் மோதலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களை சந்துரு அடிக்கடி அடித்து துன்புறுத்துவார்.

இதனால் சந்துரு மீது அந்த இளைஞர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சிக்கிய சந்துரு போலீசில் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து காலில் பலத்த காயம் அடைந்தார். இதனால் ஜாமீனில் விடுதலையாகி இருந்த சந்துரு காலில் வெளியில் எங்கும் செல்லமால் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதற்கிடையே அவரது எதிரிகள் சந்துருவை பழி வாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தனர். நேற்று இரவு சந்துருவின் கூட்டாளி பாண்டி (28) என்பவரை எதிர்க்கோஷ்டியை சேர்ந்த மேத்தியூஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதை பாண்டி சந்துருவிடம் சென்று கூறினார். இரவு 10.30 மணிக்கு வீட்டில் போதையில் இருந்த சந்துரு பாண்டியுடன் ஆட்டோவில் சென்று மேத்தியூஸ் மற்றும் இளைஞர்களை தட்டிக் கேட்க முடிவு செய்தார். சந்துரு ஆட்டோவில் கோபமாக வருவதை மோப்பம் பிடித்த மேத்தியூஸ் கோஷ்டி அவரது ஆட்டோவை இடையிலேயே கம்பு, அரிவாளுடன் வழிமறித்தது.

7 பேர் கும்பல் மறித்ததால் நிலைமை மோசமாவதை புரிந்து கொண்ட பாண்டியும், சந்துருவும் அங்கிருந்து தப்பி யோட முயன்றனர். ஆனால் வலது காலில் ஏற்கனவே அடிப்பட்டு, காயத்துடன் அவதிப்பட்ட சந்துருவால் வேகமாக ஓட முடியவில்லை.

பாண்டி லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சந்துரு அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை சராமாரியாக தலையில் வெட்டிய கும்பல் இறந்ததை உறுதி செய்த பிறகு அங்கிருந்து தப்பியோடி விட்டது.

அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாலை 3 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு என 2 கோஷ்டிகளுக்கு இடையே தொடர் மோதல் இருந்து வந்ததும், ஒருவொருக்கு ஒருவரை போலீசில் காட்டிக் கொடுப்பது, அந்த பகுதியில் ரவுடிகளில் யார் பெரியவர் என்று காட்டுவதில் மோதிக் கொள்வது என ரவுடிகள் இடையே போட்டி இருந்து வந்தது. அடிக்கடி அடிதடி, மோதல், கொலைகளும் நடப்பது வழக்கம். இதில் எப்போதும் சந்துரு கையே ஓங்கி இருக்கும்.

ஆனால் கால் உடைந்து கிடந்த சந்துரு கடைசியில் இந்த போட்டியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 20 நாட்களுக்கு முன்பு சிக்கிய வழக்கில் சிறைக்கு சென்றிருந்தால் இப்போது சந்துரு இறந்திருக்க மாட்டார் என அவரது நண்பர்கள் கூறினர்.

கொலை செய்யப்பட்ட சந்துருவிற்கு மஞ்சு என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சந்துரு கொலையுண்ட இடத்தில் அவரது தாய், மனைவி மஞ்சு மற்றும் சகோதரர்கள் கதறி அழுதனர். அப்பகுதி ஏரியா தாதாவாக நினைத்து கடைசியில் சந்துரு அதே பகுதியிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News