செய்திகள்

ரெயில்வே காலி பணியிடங்களில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2018-10-10 08:17 GMT   |   Update On 2018-10-10 08:17 GMT
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் ரெயில்வே துறையில் 2.45 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 1 லட்சம் பேருக்கு பணிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்கு ரெயில்வேயில் இதுவரை 5 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் ஓய்வு பெற்றவர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரெயில்வேயில் பணியாற்றி 60 வயதை கடந்த நிலையில் உள்ளவர்களுக்கு பணி வழங்கும்போது ரெயில்வேயில் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என ரெயில்வே ஊழியர்களே கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ரெயில்வேயில் பணிபுரிவதற்கு உடல் வலிமை, மன வலிமை ஆகியவை அவசியமான ஒன்று.

எனவே ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கும், வேலை கிடைக்காமல் காத்திருக்கின்ற இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

ரெயில்வேயில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதையும், ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GKVasan
Tags:    

Similar News