செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு- ஆளுநர் மாளிகை விளக்கம்

Published On 2018-10-09 10:25 GMT   |   Update On 2018-10-09 10:25 GMT
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

இந்நிலையில் துணை வேந்தர் நியமன முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


துணை வேந்தர் நியமனத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தோ ஆளுநர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. கோடிக்கணக்கான பணத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறிய தகவலை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.

2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.

2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
Tags:    

Similar News