செய்திகள்

தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு- போலீசில் புகார்

Published On 2018-10-03 19:29 IST   |   Update On 2018-10-03 19:29:00 IST
முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் அஜித்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக கூறி அஜித்குமார் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கோகிலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அஜித்குமார் முதல் மனைவியுடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி 2-வது மனைவி கோகிலா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அஜித்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News