செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் மோதல்- 28 பேர் படுகாயம்

Published On 2018-09-30 11:43 GMT   |   Update On 2018-09-30 11:43 GMT
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவெண்ணைநல்லூர்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மனக்குடி கிராமத்தை சேர்ந்த 50 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர்.

அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு ஆம்னி பஸ்சின் மீது மோதியது.

இதில் அந்த ஆம்னிபஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பரமகுடியை சேர்ந்த அங்குச்சாமி (வயது 62), பால்ராஜ் (55), கருப்பையா (65), சுப்பிரமணியன் (64), முருகேசன் (58), பிரபாகரன் (29) உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 28 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News