செய்திகள்

நாளை திருமணம்- புதுப்பெண் குடும்பத்தோடு மாயமானதால் மணமகன் தவிப்பு

Published On 2018-09-02 10:08 GMT   |   Update On 2018-09-02 10:08 GMT
கும்மிடிப்பூண்டி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் புதுமை வேந்தன். இவருக்கும் பொன்னேரி என்.ஜி.ஓ. நகரில் வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் செங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

இரு வீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இந்த நிலையில் புதுப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் திடீரென மாயமானார்கள். அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

இதனை அறிந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பினரின் செல்போன்களில் தொடர்பு கொண்ட போது அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் “நிச்சயதார்த்தம் நடந்த போது புதுப்பெண்ணுக்கு 4 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தோம்“ என்று தெரிவித்து உள்ளனர்.

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப் பெண்ணின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததால் குடும்பத்துடன் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News