செய்திகள்

தலைமை ஆசிரியர்கள் பணி இடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்படுகிறது- கே.ஏ.செங்கோட்டையன்

Published On 2018-08-05 12:30 GMT   |   Update On 2018-08-05 12:30 GMT
தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan

கோபி:

தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் அவரது வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 1,250 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு அதில் தனிக்கவனம் செலுத்தி, வேகப்படுத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தற்போது தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது.

தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடத்தில் அதிகமாக உள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 சதவீதம் வரை ஆங்கிலவழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்த படி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிமறைவின்றி முறைப்படி வெளிப்படைத் தன்மையோடு நிரப்பப்படும்.

மேலும் கூடுதல் காலி பணியிடங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும்.

இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள். இதன் மூலம் மத்தியஅரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #ministersengottaiyan

Tags:    

Similar News