செய்திகள்

ரூ.1½ கோடி மதிப்பில் தாய்ப்பால் வங்கிகள்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-08-01 14:30 IST   |   Update On 2018-08-01 14:30:00 IST
15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் உலக தாய்ப்பால் வார துவக்க விழா நடைபெற்றது.

பின்னர் வண்ண பலூன்களை பறக்க விட்டார். தாய்ப்பால் விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் பேசுகையில், “உலகத்தாய்பால் வாரம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும்.

சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் எதுவாயினும் தாய்ப்பாலை உடனே புகட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதனால் தாயின் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோயினை தடுக்கும்.

உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், கோவில்பட்டி, பெரம்பலூர், விருதுநகர் ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News