செய்திகள்

கைதிக்கு ஜாமின்- நள்ளிரவில் தட்டச்சு செய்ய ஆளில்லாததால் கையால் தீர்ப்பு எழுதிய நீதிபதி

Published On 2018-07-29 07:15 GMT   |   Update On 2018-07-29 07:15 GMT
தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க வாலிபர் ஜாமினுக்கு மனு தாக்கல் செய்த நிலையில், நள்ளிரவில் தட்டச்சு செய்ய ஆளில்லாததால் நீதிபதி கைப்பட தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார்.

சென்னை:

ராயபுரத்தை சேர்ந்தவர் டேவிட்சன். அதேபகுதியை சேர்ந்த பெண்ணை வாய் தகராறில் தாக்கிய வழக்கில் இவர் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று மரணம் அடைந்தார்.

இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக டேவிட்சன் தனது வக்கீல் ஏ.கே. கோபால் மூலமாக மனு தாக்கல் செய்தார்.

ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா வீட்டில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கோபால் மனு அளித்தார். இதனையடுத்த நீதிபதி ஜெகதீஷ்சந்த்ரா, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அனுமதி பெற்று ஜாமீன் மனுவை விசாரித்தார்.

இதுபற்றி தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக வக்கீல் முகமது ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா, தனது வீட்டிலேயே ஜாமீன் மனுவை விசாரித்தார். ராயபுரம் போலீசாருக்கும் அரசு வக்கீலும் வீட்டுக்கே சென்றனர்.

வாலிபர் டேவிட்சன், தந்தை விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு வசதியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் உத்தரவு கோர்ட்டில் தட்டச்சு செய்து வழங்கப்படுவது வழக்கம். நள்ளிரவில் தட்டச்சு செய்ய யாரும் இல்லாததால் நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா தனது கைப்பட ஜாமீன் உத்தரவை எழுதினார். இன்று முறைப்படி தட்டச்சு செய்து கொடுக்கப்படுகிறது. புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுதலை செய்யப்படுகிறார். #tamilnews

Tags:    

Similar News