செய்திகள்

மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 7 பேருக்கும் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும்- இலங்கை கோர்ட்டு

Published On 2018-07-25 05:32 GMT   |   Update On 2018-07-25 05:32 GMT
நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை கோர்ட்டு எச்சரித்து விடுதலை செய்தது. #NagapattinamFishermen
பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா என்பவரது படகை நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 45) வாடகைக்கு எடுத்தார்.

இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப்(50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம் பாடியை சேர்ந்த மாதேஷ்(19) வாடகைக்கு எடுத்து அந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஆழ்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர்.

பின்னர் அவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்று காங்கேசன்துறை அருகேயுள்ள காரைநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மாவட்ட மீனவர்களை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி, ‘‘நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற செப்டம்பர் 29-ந்தேதிக்குள் படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்து படகுகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து நாகை மீனவர்கள் 7 பேரும் நேற்று மாலை சேதுபாவாசத்திரம் திரும்பினர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரும் திரும்பி வந்ததால் மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #NagapattinamFishermen
Tags:    

Similar News