செய்திகள்

கோவில் நிலம் அபகரிப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணவருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2018-07-21 09:59 GMT   |   Update On 2018-07-21 09:59 GMT
கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணவருக்கு எதிராக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Highcourt

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் வாராகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாவின் கணவரும், முன்னாள் நகர மன்ற செயலாளருமான பன்னீர் செல்வம் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்டப்பஞ்சாயத்து செய்வது, தொழிலதிபர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவது என்று அவர் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள ஸ்ரீநல்லமுத்து அய்யனார் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை பன்னீர்செல்வம் அபகரித்துள்ளார்.

இதுகுறித்து கடந்த மார்ச் 6-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த நில அபகரிப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்கும் படி வருவாய்த் துறை செயலாளர், கடலூர் கலெக்டர், உள்ளிட்டோருக் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#Highcourt

Tags:    

Similar News