செய்திகள்

கட்சியை கட்டமைக்க முடியாமல் கமல்ஹாசன் திணறுகிறார்: தமிழருவி மணியன் பேட்டி

Published On 2018-07-16 09:58 GMT   |   Update On 2018-07-16 09:58 GMT
நடிகர் கமல்ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார் என்று தமிழருவிமணியன் குற்றம் சாட்டியுள்ளார். #kamal #rajinikanth #tamilaruvimanian

கோவை:

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயை கூட்டுவதில் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் நினைத்தால் ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டு வர முடியும்.

ஊழலை பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி அரசு இன்னும் 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை.

8 வழிச்சாலை மூலம் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும் என்றால் எப்படி என்பதை விளக்க வேண்டும்.

ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார். அதில் ரஜினி தெளிவாக உள்ளார். கமல் ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார். மக்கள் ஆதரவு இருந்தால் தான் எந்த மகத்தான மனிதரும் முதல்-அமைச்சராக முடியும்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக 80 சதவீதம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 20 சதவீதம் பணிகள் முடிவடைந்ததும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். ரஜினிகாந்த் எளிமையான மனிதர். தலைக்கணம் சிறிதும் அவரிடம் இல்லை. கட்சி தொடங்குவது, எப்படி மக்களை சந்திப்பது? தேர்தலை சந்திப்பது உள்ளிட்டவை குறித்து எல்லாம் ரஜினி தான் சொல்வார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது.

இதுவரை பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. ரஜினி முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினி தருவார் என நம்புகிறோம். அவருக்கு துணையாக இருப்போம். ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான். முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினிகாந்த் அகற்றுவார். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார். கமல்ஹாசன் சூப்பர் ஆக்டர். மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் சித்தராமைய்யாவின் ஆட்சிக்கு முன்பு நடைமுறையில் இருந்த லோக் ஆயுக்தாவின் அம்சங்கள் அனைத்தும் உள்ளடங்கிய சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகமக்கள் வறுமையிலிருந்து விடுபடவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்படவேண்டும். ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடமுடியாது என்றாலும் இந்த ஆட்சி கவிழ்ந்து வேறு ஆட்சி மலர்ந்தாலும் ஓராண்டுக்குள் பூரண மது விலக்கு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப் படவேண்டும்

எட்டு வழிச்சாலை அமைப்பதன் மூலம் உண்மையில் தமிழகத்தின் பொருளாதாரம் வலுப்பெறும், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றால் பாதிக்கப்படும் மக்களிடம் முறையாக விளக்கம் அளித்து எந்த நிலையிலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில் மிக உயர்ந்த இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்கு இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இயன்றவரை இந்தத் திட்டத்தையே கைவிடுவது நல்லது.

அ.திமு.க., திமு.க. ஆகிய கட்சிகளின் பிடியிலிருந்தும் தமிழகத்தை முற்றாக விடுவிப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும். குட்கா ஊழலிலிருந்து சமீபத்திய முட்டை ஊழல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் ஊழலுக்கு உற்சவம் நடக்கும் நிலையில் இந்த ஆட்சிக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்து மொத்தமாக மூட்டை கட்டி கோட்டையிலிருந்து வெளியேற்றுவதுதான் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி . உண்மையும் நேர்மையும் எளிமையும் நிறைந்த ஒரு நல்ல தலைமைக்குரிய பண்புகளைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தொடங்க இருக்கும் அரசியல் கட்சிக்கு மக்கள் பேராதரவை நல்கிஅவரை முதல்வராக்க உறுதியேற்க வேண்டும். 

ரஜினிகாந்த் மூலம் ஊழலின் நிழல்படாத ஓர் உயர்ந்த ஆட்சியும், வெளிப்படைத்தன்மை கொண்ட சிறந்த நிர்வாக மும் தமிழகத்திற்கு வந்து வாய்க்கும் என்று காந்திய மக்கள் இயக்கம் அழுத்தமாக நம்புகின்றது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #kamal #rajinikanth #tamilaruvimanian

Tags:    

Similar News