செய்திகள்
ஏரிச்சாலையில் முறிந்து விழுந்த மரத்தை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் சூறைக்காற்று - பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-07-16 04:29 GMT   |   Update On 2018-07-16 04:29 GMT
கொடைக்கானலில் சூறைக்காற்று வீசியதால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருவதால் நகர் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

நேற்றும் பலத்த காற்று வீசியதால் நட்சத்திர ஏரிச்சாலை, பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரவு முழுவதும் பொதுமக்கள் இருளில் தவித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பேரிஜம் ஏரி பகுதியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மரம் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் சவுக்கு, பைன் போன்ற மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காற்றின் வேகம் குறைந்த பின் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.



Tags:    

Similar News