செய்திகள்

ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிதி - விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

Published On 2018-06-28 21:56 IST   |   Update On 2018-06-28 23:02:00 IST
ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்:

கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News