செய்திகள்

தூத்துக்குடியில் 3-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தடயங்கள் சேகரிப்பு

Published On 2018-06-25 07:44 GMT   |   Update On 2018-06-25 07:44 GMT
தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விவரங்களை பெறவும், துப்பாக்கிகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துப்பாக்கிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலவரப்பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலக பகுதியில் ஒரு குழுவினரும், திரேஸ்புரம், அண்ணாநகர் பகுதியில் மற்றொரு குழுவினரும், இதர பகுதியில் வேறு குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள். மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டிலும், இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா பகுதியிலும் சோதனை நடத்தினர்.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற சோதனையில் தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சுவரில் ஒரு தோட்டா துளைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே இன்னொரு தோட்டாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தோட்டாக்களை இன்று போலீசார் சுவரில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பினார்கள். இதுவரை நடைபெற்ற ஆய்வில் துப்பாக்கி சூடு தொடர்பான முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News