செய்திகள்

நட்பு ரீதியில் தினகரனுடன் உள்ளேன்: கலைச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

Published On 2018-06-16 10:36 GMT   |   Update On 2018-06-16 10:36 GMT
அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை, நட்பு ரீதியில் தினகரனுடன் உள்ளேன் என்று கலைச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார். #dinakaran #kalaiselvanmla #admk

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவரிடம் தற்போது தினகரன் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னை நேரடியாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்ததால்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். நான் அ.தி.மு.க.வில்தான் இருந்து வருகிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.

ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் நாங்கள் அவருக்கு வாக்களித்து முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம்.

தற்போது டி.டி.வி.தினகரனுடன் நட்பு ரீதியாகதான் இருந்து வருகிறேன். மேலும் அவர்தான் என்னை அவரது அணிக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில்தான் இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால், தமிழக அரசை மட்டும் குறை கூறி வருகிறீர்களே ஏன் என்று கேட்டபோது, தமிழக அரசுக்கும், எனக்கும் மாற்று கருத்துதான் உள்ளது. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினேன். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது நியமித்துள்ள சத்துணவு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தி.மு.க. தொகுதிக்கு சுமார் 10 கோடி அளவில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற நான் வலியுறுத்தி வருகிறேன். கேள்வி கேட்பது என்னுடைய உரிமை, அதை செய்து வருகிறேன். ஆனால், அ.தி.மு.க. கட்சிக்கும், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.  #dinakaran #kalaiselvanmla #admk

Tags:    

Similar News