செய்திகள்

தூத்துக்குடியில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்கு

Published On 2018-06-14 10:44 IST   |   Update On 2018-06-14 10:44:00 IST
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.#ThoothukudiShooting #SterliteProtest
அரியலூர்:

அரியலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பால்பாண்டி. இவர் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குறித்து இழிவான தகவல்களை பரப்பியுள்ளார்.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் கருத்து வெளியிட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த அரியலூர் நகர வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து, துப்பாக்கி சூடு குறித்து இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் பால்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரியலூர் போலீசில் புகார் மனு அளித்தார்.

ஆனால் இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரியலூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய ஆயுதப்படை போலீஸ்காரர் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் சுபா ஆகியோர், பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting #SterliteProtest
Tags:    

Similar News