செய்திகள்

பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Published On 2018-06-14 10:01 IST   |   Update On 2018-06-14 10:01:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் 2 சோதனை சாவடிகள் உள்ளன.

வன சோதனை சாவடியும் அருகேயே வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியும் உள்ளது.

இன்று காலை 6 மணியளவில் ஈரோட்டிலிருந்து 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.

அவர்கள் பண்ணாரி வன சோதனை சாவடி அருகே உள்ள வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடிக்குள் புகுந்தனர். உள்ளே நுழைந்து கேட்டை அடைத்து கொண்டனர். உள்ளே இருந்த ஊழியர்களை வெளியே விடவில்லை. அவர்களிடம் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

நாள் ஒன்றுக்கு இந்த வழியாக எத்தனை வாகனங்கள் செல்கிறது? சரக்கு லாரிகள் எத்தனை செல்கிறது? அவர்களிடம் எந்த முறையில் சோதனை மேற்கொள்கிறீர்கள்? என்று கிடுக்கி பிடி கேள்விகள் கேட்டனர்.

மேலும் சோதனை சாவடியில் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தை அங்கு உள்ள மேஜையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்து எண்ணினர். இதில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது. “சோதனை நடத்தி கொண்டிருக்கிறோம். பிறகு சொல்கிறோம்” என்று கூறினர்.

பண்ணாரி வாகன போக்குவரத்து சோதனை சாவடியில் இன்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News