செய்திகள்

கிண்டியில் கார் தீப்பிடித்து எரிந்தது- பேராசிரியை உயிர் தப்பினார்

Published On 2018-06-09 11:37 IST   |   Update On 2018-06-09 11:37:00 IST
சென்னை கிண்டியில் இருந்து பரங்கிமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.
சென்னை:

போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சித்ரா, பல் டாக்டரான இவர் தாழம்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் கிருபா ஓட்டிச் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கி பரங்கிமலை பட்ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் கிருபா அதிர்ச்சி அடைந்து காரை சாலை யோரமாக நிறுத்தினார்.

உடனே பேராசிரியை சித்ரா, டிரைவர் கிருபா காரில் இருந்து கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று கார் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

கிண்டியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை சித்ரா, கார் டிரைவர் கிருபா ஆகியோர் உயிர் தப்பினார்கள். #Tamilnews
Tags:    

Similar News