செய்திகள்

மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்த கலெக்டர் - தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆய்வு

Published On 2018-06-08 04:14 GMT   |   Update On 2018-06-08 04:14 GMT
வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் ராமன் பள்ளி வகுப்பறையில் மாணவரை போன்று அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்துவதை கவனித்தார். #vellorecollector #collectorraman
வேலூர்:

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 36 ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் அருகில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்ததை தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, ஆசிரியை ஒருவர் வேதியியல் பாடம் கற்பித்ததை மாணவர்கள் போன்று கவனித்தனர். சுமார் 45 நிமிடம் மாணவரை போலவே கலெக்டர் பாடத்தை கவனித்தார்.

பிறகு மற்ற வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை படிக்க சொல்லியும், கற்றதை எழுத சொல்லியும் அவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, வாசிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் ஒரு ஆசிரியை விடுமுறை எடுத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் காலை 10 மணிக்குள் வருகை பதிவேட்டை முடிக்காததும் தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் விடுமுறை எடுத்த ஆசிரியை ஆகிய 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

மேலும் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். #vellorecollector #collectorraman

Tags:    

Similar News