செய்திகள்

பாளை சிறையில் மர்மமாக இறந்த‌ வாலிபர் உடல் 5-வது நாளாக வாங்க மறுப்பு

Published On 2018-06-04 08:07 GMT   |   Update On 2018-06-04 08:07 GMT
தூத்துக்குடி கலவர வழக்கில் கைதாகி பாளை சிறையில் மர்மமாக இறந்த‌ வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்த பரத்ராஜா (வயது36) என்பவர் தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவர் கடந்த 23-ந் தேதி நடைபெற இருந்த அவரது தம்பி தனசேகரன் திருமணத்துக்காக 7 நாட்கள் பரோலில் வெளி வந்திருந்தார்.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலைக் கெதிரான போராட்டத்தில் பரத்ராஜா ஈடுபட்டதாக கூறி 23-ந்தேதி போலீசார் கைது செய்து அழைத்து சென்ற‌னர். அங்கு விசாரணை என்கிற பெயரில் பரத்ராஜாவை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பரத் ராஜாவை பாளை சிறையில் அடைத்தனர்.

போலீசார் தாக்கியதில் பரத்ராஜா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 30-ந்தேதி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்த‌னர். இதையடுத்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

பரத்ராஜா சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கேட்டு அவரது உறவினர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று 5-வது நாளாக பரத்ராஜாவின் உடல் வாங்கப்படவில்லை. தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News