செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2018-06-04 12:01 IST   |   Update On 2018-06-04 12:01:00 IST
குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளுர்- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து வந்த பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஒதப்பை பகுதியில் அரசு குவாரி மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்த போது நிர்ணயித்த அளவை விட கூடுதல் ஆழத்தில் மணல் எடுத்ததால் ஆற்று நீர் வற்றிப் போனது.

இதனால் ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் வராததால் மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்’ என்றனர்.

Tags:    

Similar News