செய்திகள்

காவிரி பிரச்சினைக்கு பிரதமர் மோடி நிரந்தர தீர்வை ஏற்படுத்தியுள்ளார்: பொன்.ராதா கிருஷ்ணன்

Published On 2018-06-03 21:33 IST   |   Update On 2018-06-03 21:33:00 IST
150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திய பிரதமர் மோடியை டெல்டா மண்ணிற்கு அழைத்து விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்:

பா.ஜனதா சார்பில் உழவனின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர்கள் புரட்சி கவிதாசன், வேதரெத்தினம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திய பிரதமர் மோடியை டெல்டா மண்ணிற்கு அழைத்து விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும். அதற்காக அனைத்து விவசாய சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பா.ஜனதா கட்சி சார்பில் மிக பிரமாண்டமான அளவில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்தப்படும்’’

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரத்திற்கு பிறகு நம் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் உயர்த்தி காட்டி இருக்கிறார். 150 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த காவிரி பிரச்சினைக்கு சரியான முறையில், உரிய நேரத்தில் நிரந்தர தீர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டேன் என்று கூறியவர்களை கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். 50 ஆண்டுகளாக காவிரி பிரச்சினையில் திராவிட இயக்கங்கள் துரோகங்கள் செய்தன. இவற்றை எல்லாம் முறியடித்து பிரதமர் மோடி தீர்வை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதிக்குள் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும். அப்படி இல்லையென்றால் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட இயக்கத்தினர் கர்நாடகத்திற்கு சென்று தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News