செய்திகள்
அணையின் நீர்தேக்க பகுதியில் சோளப்பயிர்களை விவசாயிகள் அவசர, அவசரமாக அறுவடை செய்த காட்சி.

மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியை தாண்டியது

Published On 2018-05-30 09:20 GMT   |   Update On 2018-05-30 09:20 GMT
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடியை தாண்டியது.
மேட்டூர்:

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாளையுடன் கோடை விடுமுறை முடிய உள்ளதால் ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து அங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசலிலும் சவாரி சென்றனர்.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 22-ந் தேதி 479 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 5,060 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 5,426 கன அடியாக இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து 10-ல் ஒரு பங்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 26-ந் தேதி 33.76 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 35.84 அடியானது. இன்று ஒரே நாளில் மேலும் ஒரு அடி உயர்ந்து காலை 8 மணி நிலவரப்படி 36.72 அடியாக இருந்தது. பிற்பகல் அணையின் நீர்மட்டம் 37 அடியை தாண்டியது. இதனால் கடந்த 4 நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கர்நாடக மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அந்த அணைகளில் பாதிக்கும் மேல் நீர் இருப்பு உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் விரைவில் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News