செய்திகள்

இணையதள சேவை முடக்கம் - என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவித்த மாணவர்கள்

Published On 2018-05-25 02:59 GMT   |   Update On 2018-05-25 02:59 GMT
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். #sterliteprotest
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதனால் வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் தகவல்களை பரிமாற முடியவில்லை.



தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்களால் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்கள், தனியார் இண்டர்நெட் மையங்களிலும் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பெயர் மாற்றம், ஆதார் அட்டை இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் டிக்கெட், பத்திரப்பதிவு ஆகியவைகளும் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், வங்கிகளின் பணப்பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்கள் காசோலை, வரைவோலை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #sterliteprotest

Tags:    

Similar News