செய்திகள்
மருத்துவக்குழுவினர் சோதனை செய்யும் காட்சி.

நிபா வைரஸ் பீதி - கேரள தேயிலை தோட்டத்திற்கு செல்ல தமிழக தொழிலாளர்கள் தயக்கம்

Published On 2018-05-23 05:53 GMT   |   Update On 2018-05-23 05:53 GMT
நிபா வைரஸ் பீதியால் கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தமிழகதொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். #NipahVirus

கம்பம்:

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப்பகுதிகளான லோயர்கேம்ப், கம்பம் மெட்டு சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

லோயர்கேம்ப் பஸ் நிலையத்தில் தேனி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது.

மேலும் அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி மருந்து தெளித்து வருகின்றனர். காய்ச்சல் இருந்தால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக கம்பம், போடி அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். இதற்காக அவர்கள் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு சாலை வழியாக இடுக்கி மாவட்டத்திற்கு செல்கின்றனர்.


நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏலக்காய், தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு செல்லும் தமிழக தொழிலாளர்கள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர்.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் உயிரிழந்து விடுவதால் இதுகுறித்த தகவல் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் உள்ளதால் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சைகள் வழங்கியும், கூலித்தொழிலாளர்களின் அச்சத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். #NipahVirus

Tags:    

Similar News