செய்திகள்

ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமி பயங்கரமாக ஆட்சி செய்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

Published On 2018-05-13 16:57 IST   |   Update On 2018-05-13 16:57:00 IST
ஜெயலலிதாவைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயங்கரமாக ஆட்சி செய்கிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று கோடைவிழா-மலர்கண்காட்சி தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழா-மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லோரும் எளிதில் அணுகும் முதல்வராக உள்ளார். அமைச்சராக இருந்ததை விட முதல்வரான பிறகு அவர் மிக எளிமையாக இருக்கிறார். முதல்வர் பொறுப்பு என்பது மிகவும் கடுமையானது. அந்த சூழலிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

தமிழகத்தில் இன்றைக்கு சாலையில் நடந்து செல்லும் யார், யாரோ? முதல்-அமைச்சர் கனவு காண்கிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர், எப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலையும்? நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம்? என்று கனவு காண்கிறார். தகுதியில்லாமல் அவர் தரக்குறைவாக செயல்படுகிறார். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது.

முதல்- அமைச்சர் பதவி என்பது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டும். மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த 2 வி‌ஷயங்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதை காணமுடிகிறது. அவரது ஸ்டைல் வித்தியாசமானது. இதனால் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.

‘‘என்னையா இது.. அம்மா ஆட்சியை விட பயங்கரமாக போய்கிட்டு இருக்கு’’.. எங்கு பார்த்தாலும், டி.வி.யை பார்த்தாலும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் அதை செய்தார், இதை செய்தார் என கேட்க முடிகிறது.

காலையில் 10 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு முதல்-அமைச்சர் கோட்டைக்கு வந்ததும், 10 இலாகாக்கள் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். நான் புதிய அமைச்சராக இருப்பதால் இது எனக்கு புரிவதில்லை.

அவர், ஏற்கனவே அம்மா காலத்தில் அமைச்சராக இருந்ததால் நல்ல டிரெயினிங் கொடுத்து மிக சிறப்பாக செதுக்கி செதுக்கி இருக்கிறார்கள். எனக்கு பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் இருக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கூறி இருந்தார். அது எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்து தான் அவர் சொல்லி உள்ளார்.

மத்திய அரசுக்கு ‘ஜால்ரா‘ போடுவதாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசிடம் கேட்டு பெறுவது ‘ஜால்ராவா‘?. நல்ல வி‌ஷயங்களை மக்களுக்கு அவர் செய்து வருகிறார்.

இன்றைக்கு தி.மு.க.செயல் தலைவருடன் இருக்கும் 9 கட்சி தலைவர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கி ஆளாக்கப்பட்டவர்கள். அதை மறந்துவிட்டு தற்போது அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாதது.

ஹஜ் பயணிகளுக்கு சலுகை ரத்து, முத்தலாக் பிரச்சினை என இதர பிரச்சினைகளிலும் இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வினர் குரல் கொடுத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 32 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தி அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் தேவை? என கண்டறிந்து அவற்றை தொடங்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சேரும். மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால் இந்த அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #tamilnews

Tags:    

Similar News