செய்திகள்

தேனி மாவட்டத்தில் தொடர் மழை

Published On 2018-05-11 06:07 GMT   |   Update On 2018-05-11 06:07 GMT
தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது.

கூடலூர்:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னிநட்சத்திரம் தொடங்கியதில் இருந்து காலை நேரங்களில் வெயில் கொளுத்துகிறது.

மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடிகிறது.

பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 473 கனஅடியாக உயர்ந்துள்ளது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து 902 கனஅடிநீர் வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் ஒரேநாளில் 1¼ அடி உயர்ந்து 35.99 அடியாக உள்ளது. 48 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.40 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.50அடியாக உள்ளது. 80 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை மழை கைகொடுத்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மழை தொடரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News