செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

உளுந்தூர்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2018-05-10 06:25 GMT   |   Update On 2018-05-10 06:25 GMT
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது43). டிராவல்ஸ் அதிபர். இவரது உறவினர் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீராம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.

இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் ஸ்ரீராமின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 15 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை ஸ்ரீராம் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீராம் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வழிப்பறி மற்றும் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News