செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை இன்று முதல் அமல்

Published On 2018-05-10 06:05 GMT   |   Update On 2018-05-10 06:05 GMT
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 13-ந்தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைசட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலங்கள் மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றுக்கு பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News