செய்திகள்
ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க. மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஆண்டிமடம்:
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தினை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. கொறடா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த 2 வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராம ஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
உலக தமிழர்கள் மற்றும் தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்மாவின் புகைப்படத்தை சட்ட மன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற வழக்கு, துணை முதல்வர் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த இரண்டு வழக்குகளுமே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டது. இது தி.மு.க.விற்கு கிடைத்த சம்மட்டி அடி ஒரு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டதும் (குட்கா) ஆளும் அரசை வாபஸ் பெற சொன்னார். ஆனால் தற்போது இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் சட்ட பேரவையை பொருத்த வரை சபாநாயகர் மட்டுமே அதிக அதிகாரம் படைத்தவர், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் வரவுள்ள 18 எம்.எல்.ஏக்கள் வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.