செய்திகள்

செங்கல்பட்டில் அரசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம்

Published On 2018-04-21 11:36 IST   |   Update On 2018-04-21 11:36:00 IST
செங்கல்பட்டில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

செங்கல்பட்டு:

கடலூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 40 பயணிகள் இருந்தனர். இன்று காலை 7.30 மணிக்கு செங்கல்பட்டை அடுத்த புலிபாக்கம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்துக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

குறுக்கே வந்த வாலிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க லாரியை டிரைவர் திருப்பினார். இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

உடனே அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் தேவநாதன், கண்டக்டர் ராதாகிருஷ்ணன், மஞ்சகுப்பத்தை சேர்ந்த தமிழரசன், பாண்டிச்சேரியை சேர்ந்த ராமலிங்கம், அவரது மகன் நரேந்திரன் (12), பெரம்பூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஜெயந்தி, அவரது மகள் சந்தியா, மகன் நவீன் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News