செய்திகள்

தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க. இழந்துவிட்டது - பாலகிருஷ்ணன் பேச்சு

Published On 2018-04-10 11:57 IST   |   Update On 2018-04-10 11:57:00 IST
தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க. இழந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அரியலூர்:

அரியலூரில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவை பார்க்கும் போது, கர்நாடக தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. நரேந்திர மோடிக்கு துணை போகும் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைத்துள்ளது. மோடி ஆட்சி இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. எனவே, ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சியினரை அழைத்து பேசியிருக்க வேண்டும். அ.தி.மு.க. தமிழகத்தை ஆளுகின்ற தகுதியை இழந்து விட்டது. காவிரி உரிமையை மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

காவிரியில் நாம் கேட்ட அளவிற்கு தண்ணீர் கிடைக்க வில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்பார்ப்பதை நீதிமன்றம் தருகிறது. மத்திய அரசை நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அது போல் நடக்க வாய்ப்பில்லை. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மேலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கவே வாய்ப்பாக அமையும்.


உச்சநீதிமன்றம் மே 3-ந் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் அது போல் நீதிமன்றம் சொல்ல வில்லை. வரைவு அறிக்கை திருத்தத்திற்கும் விவாதத்திற்கும் வழிவகுக்கும்.

தமிழகத்தில் அனைவரும் ஒத்த கூரல் எழுப்ப வேண்டும். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பிரதமரை சந்திக்க தமிழகத்தில் இருந்து யாரும் கடிதம் தரவில்லை என கூறியுள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்.

மோடி அரசின் தமிழர் விரோத போக்கை அம்பலப்படுத்தவே இந்த மீட்பு பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதையாக உள்ளது. இதே போல் தான் நீட் தேர்விலும் கழுத்தை அறுத்தார்கள். இதனால் தான் மாணவி அனிதாவை இழந்தோம். இன்னொரு சோமாலியாவாக தமிழகம் ஆக வேண்டுமா? மத்திய அரசால் இந்த திட்டம் 6 வாரத்தில் உருவாக்கப்பட வேண்டும் என கூறிவிட்டு, தற்போது, அது எந்த திட்டத்தின் கீழ் உருவாக்க போகிறீர்கள் என விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட போகிறீர்கள் என்றெல்லாம் சொல்லி விட்டு, தற்போது உச்சநீதி மன்றமே தங்களது வாக்குறுதியை மீறிவிட்டது.

மக்களை நம்புவதை தவிர வேறு யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை. உச்சநீதிமன்றம் கொடுத்த இறுதி தீர்ப்பில் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு கிடையாது என அறிவித்து தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றம் மீறியுள்ளது என்றார்.  #tamilnews

Similar News