செய்திகள்

புதுக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியினர் ரெயில் மறியல்- 50 பேர் கைது

Published On 2018-04-02 14:35 IST   |   Update On 2018-04-02 14:35:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று காலை ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், கட்சி கொடிகளை ஏந்தியபடியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கோ‌ஷமிட்டப்படி புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். ரெயில் நிலையம் அருகே வந்ததும் அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் புதிய தமிழகம் கட்சியினர், மாற்று வழியாக ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதன் காரணமாக போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை லேசாக தாக்கியதோடு, அலாக்காக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 50பேரையும் கைது செய்தனர். #Tamilnews

Similar News