செய்திகள்
நர்சு தற்கொலை செய்துகொண்ட தனியார் ஆஸ்பத்திரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

அறந்தாங்கி அருகே தனியார் மருத்துவமனையில் நர்சு தற்கொலை

Published On 2018-03-28 09:40 IST   |   Update On 2018-03-28 09:40:00 IST
அறந்தாங்கி அருகே இன்று தனியார் மருத்துவமனையில் நர்சு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கிராமத்தில் டாக்டர் முத்து என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இங்கு முத்துக்குடா கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் மகள் தாயம்மாள் (வயது 24) என்பவர் நர்சாக இருந்தார். டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே அதே மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சு வேன் டிரைவருடன் தாயம்மாளுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் நெருங்கி பழகி வந்த தாயம்மாளை மருத்துவமனை நிர்வாகமும், டாக்டரும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் தங்கள் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. இன்று அதிகாலை பணியின் போது தாயம்மாளும், ஆம்புலன்சு வேன் டிரைவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது நோயாளிகளை பார்ப்பதற்காக வந்த டாக்டர் இதனை கண்டித்துள்ளார்.

நோயாளிகள் முன்பு அவமானம் அடைந்த தாயம்மாள் நர்சுகளுக்கான ஓய்வறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் தாயம்மாளின் உடலை மணல்மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் தகவல் அறிந்து சம்பவம் தொடர்பாக கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மணல்மேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின்னரே தாயம்மாளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயம்மாளின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். தாயம்மாள் இறந்ததும் முதலில் தங்களுக்கோ, போலீசுக்கோ தகவல் தெரிவிக்காமல் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியாக தாங்களாகவே மணல் மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனவே தாயம்மாள் சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Similar News