செய்திகள்

விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ஆலங்குடி தி.மு.க. எம்.எல்.ஏ.

Published On 2018-03-27 20:11 IST   |   Update On 2018-03-27 20:11:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்கு சென்று திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தி.மு.க. மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, காரில் ஆலங்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை வெள்ளனூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், எம்.எல்.ஏ. சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

விபத்தில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் மற்றும் கார் டிரைவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த சக்தி, மோகன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் படுகாயமடைந்த சக்தி, மோகன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News