செய்திகள்

புதுக்கோட்டையில் பா.ஜ.க. டிஜிட்டல் பேனர்கள் கிழித்து சேதம்

Published On 2018-03-24 10:34 IST   |   Update On 2018-03-24 10:34:00 IST
புதுக்கோட்டையில் இன்று பா.ஜ.க.வினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி அவரை வரவேற்று புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள், டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை டவுன் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பா.ஜ.க.வினர், பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, போலீசாரை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பா.ஜ.க.வினரின் டிஜிட்டல் பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யாரென்று தெரியவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரியார் குறித்து பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை காரணமாக சில இடங்களில் பா.ஜ.க.வினர் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் டிஜிட்டல் பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews

Similar News