செய்திகள்

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைப்பு- கைதான மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சிக்கியது எப்படி?

Published On 2018-03-21 10:57 IST   |   Update On 2018-03-21 10:57:00 IST
புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவ சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலையை திராவிடர் கழகத்தினர் பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை பார்த்த போது பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு துண்டாக கிடந்தது. மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சிலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தனர். சம்பவ இடத்தில் திராவிட கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. தமிழகத்தின் சில இடங்களில் பெரியார், அண்ணா சிலைகள் அவமதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் , ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சிலையை உடைத்த மர்நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை தலைமைக்காவலர் செந்தில்குமார் (வயது40) என்பவர் உடைத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கலைநிலா, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, செந்தில்குமாரை போலீசார் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.


பெரியார் சிலையை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி பகுதியை சேர்ந்தவர். சத்தீஸ்கார் மாநிலத்தில் 150-வது பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவர், 5 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

மது பழக்கத்துக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு 1மணிக்கு புதுக்கோட்டை விடுதியில் பெரியார் சிலை அருகே உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் மது கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இல்லையென்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரகளையில் ஈடுபடவே, ஊழியர்கள் அவருக்கு மதுபாட்டில்களை கொடுத்துள்ளனர். அதனை வாங்கி குடித்த அவர், போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது பெரியார் சிலை மீது ஏறிய அவர், போதை மயக்கத்தில் சிலையின் தலையை கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலை துண்டானது. இதனால் பயந்து போன அவர், அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். போலீசார் சிலையை உடைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற செந்தில்குமார், பொது மக்களுடன் சேர்ந்து போலீசார் நடத்தும் விசாரணையை பார்த்து கொண்டிருந்துள்ளார்.

இந்தநிலையில் அங்குள்ள டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, நள்ளிரவு ஒருவர் மது கேட்டு தகராறில் ஈடுபட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், யாரென்று கண்டு பிடிப்பதற்காக டாஸ்மாக் பாரில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிடவே, அப்பகுதியில் ரிசர்வ் படை போலீஸ்காரர் செந்தில் குமார் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதனிடையே போலீசாரிடம் சிக்காமல் இருக்க செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற போலீசார், செந்தில்குமாரை விசாரணைக்காக ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, எஸ்.பி.செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குடிபோதையில் பெரியார் சிலையை உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews

Similar News