செய்திகள்

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைப்பு - உடனடியாக சீரமைத்த அதிகாரிகள்

Published On 2018-03-20 04:39 GMT   |   Update On 2018-03-20 08:40 GMT
புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் பெரியார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சிலையை சீரமைத்தனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவ சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்துவைக்கப்பட்டது.

அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராவணன் தலைமையில் நடந்த இந்த விழாவை தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து அந்த சிலையை பராமரித்து வந்தனர். பெரியார் நினைவு நாள், பிறந்தநாளன்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.



துண்டிக்கப்பட்ட தலை பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர்.

மேலும் அங்கு பதட்டத்தை தவிர்க்கும் வகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

அரசின் உத்தரவுப்படி உடைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் உடனடியாக சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிரடியாக செயல்பட்ட அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னதாக உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை ஒட்டவைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வின் பெரியார் குறித்த டுவிட்டர் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில் வேலூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நாமக்கல் அருகே பெரியார், அண்ணா சிலைகள் அவமதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News