செய்திகள்

தொழிலாளியிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Published On 2018-02-27 12:39 IST   |   Update On 2018-02-27 12:39:00 IST
அரியலூர் அருகே ரூ.800 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், தொழிலாளி. குடும்பத்தகராறு காரணமாக இவரது உறவினர்கள் 4 பேர் மீது விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களை ஜாமீன் எடுக்க 8 பேரின் அத்தாட்சி தேவைப்படவே, பரமசிவம், ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியான கீழப்பளூர் கிராமத்தை சேர்ந்த நாராயணனை சந்தித்து அத்தாட்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால் நாராயணன், அத்தாட்சி வழங்க வேண்டுமென்றால் தனக்கு 800 ரூபாய் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமசிவம், இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பரமசிவத்திடம் கொடுத்து அனுப்பினர். அவர் ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வி.ஏ.ஓ. நாராயணனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 21.5.2004 அன்று நடந்தது.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார். அதில் நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். #Tamilnews

Similar News