செய்திகள்
அரசியலில் கமல், ரஜினியால் ஜெயிக்க முடியாது-வைகைசெல்வன் பேச்சு
நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலில் ஒரு நாளும் ஜெயிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பேசினார்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசெயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பேரவை நகர செயலாளர் லோகராஜ் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறோம். அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் கட்சி துவங்கவில்லை. பொதுமக்களும், ரசிகர்களும் தலைவா வா கட்சி ஆரம்பிக்க என்று சொன்னததால்தான் இந்த இயக்கம் உருவானது. 1கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். நடிகராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் முதலமைச்சரானார். ம.பொ.சி, சிவாஜிகணேசன், பாக்கியராஜ், ராஜேந்தர், அனைவரும் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? கமலஹாசன், ரஜினிகாந்த், ஆகியோர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அரசியலில் ஒரு நாளும் ஜெயிக்க முடியாது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. எம்ஜிஆர். மறைவிற்கு பிறகும் ஒன்றரை கோடி தொண்டர்களை கட்டி காத்தவர் ஜெயலலிதா. ஆற்றல் மிக்க தலைவி. நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றவர். 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. ஜெயலலிதா இல்லாமல் இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகின்றோம். மிகுந்த வேதனையை அளிக்கின்றது. தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி தொடர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews