செய்திகள்

நடிகர்கள் கட்சி தொடங்குவது தி.மு.க.வுக்கு தான் பாதிப்பு- ராஜன் செல்லப்பா பேச்சு

Published On 2018-02-26 10:15 GMT   |   Update On 2018-02-26 10:15 GMT
நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை. அது தி.மு.க. விற்குதான் மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்று ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். #rajanchellappamla

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. புறநகர் மாவட்டம் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராம கிருஷ்ணன், துணைச் செயலாளர் நிலையூர் முருகன், பேரவை ஒன்றிய தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆருடன் பலர் நடித்திருந்தாலும் அவர் ஜெயலலிதாவை மட்டுமே தேர்வு செய்து கட்சியில் கொள்கைபரப்பு செயலாளர் பதவி அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக்கி அறிஞர் அண்ணா அமர்ந்த நாற்காலியில் அமர வைத்தார்.

அத்தகைய ஆளுமை மிக்க ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவர் கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் மனதில் என்றும் வாழும்.

அவரது திட்டங்களை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்துக்கு தேவையான நலத் திட்டங்களை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம்.

அவர்களுடன் கூட்டணி அமைக்கவில்லை. நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை. அது தி.மு.க. விற்குதான் மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்.

எனவே உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெறுவோம் என்ற சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ஓம்.கே.சந்திரன், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் பாரி, சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் அக்பர் அலி, இலக்கிய அணி பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாயி, நிர்வாகிகள் பூமி பாலகன், ஐ.பி.எஸ்.பால முருகன், என்.எஸ்.பால முருகன், கர்ணா, கருத்த பாண்டி, குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News